February 17, 2010

கங்கைகொண்டான்: படுவேகத்தில் உருவாகும் 'ஐடி' பூங்கா

நெல்லை: கங்கைகொண்டானில் ரூ.24 கோடியில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கங்கைகொண்டானில் நடைபெற்றுவரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

'தமிழக முதல்வரின் ஆணைப்படி இரண்டாம் நிலை நகரங்களான கோவை, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதன்படி கங்கைகொண்டானில் 54 ஆயிரம் சதுர அடியில் நிர்வாக கட்டிடங்கள் ரூ.14 கோடி மதிப்பிலும், உட்கட்டமைப்பு பணிகள் ரூ.10 கோடியிலும் நடந்து வருகின்றன. இப்பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும்.

இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கும். சதர்ன் லேண்ட், குளோபல் நிறுவனங்களுக்கு தலா 5 ஏக்கரில் நிலம் ஓதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப பூங்கா மொத்தம் 389 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது. இதில் தற்போது 100 ஏக்கர் நிலத்தில் பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

Source: ThatsTamil.OneIndia.in

No comments: